Advertisement

Wednesday, June 18, 2014

முண்டாசுப்பட்டி

குறும்படங்களை  முழுநீளப் படமாக தயாரித்து வெற்றிக்கண்டு வரும் சி.வி.குமார், தயாரித்துள்ள மேலும் ஒரு குறும்படமாக இருந்த முழுநீளப் படமாக வளர்ந்த படம் தான் இந்த 'முண்டாசுப்பட்டி'.

புகைப்படம் எடுத்துக்கொண்டால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கை கொண்ட கிராமம் தான் முண்டாசுப்பட்டி. இதற்காக அந்த ஊரில் உள்ள யாரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், மரணம் அடைந்த பிறகு
பிணத்தை புகைப்படம் எடுக்கும் பழக்கம் உள்ளவர்கள். அதன்படி, அந்த ஊர் தலைவர் மரணம் அடைய, போட்டோகிராபரான விஷ்ணுவும், அவருடைய  அசிஸ்டெண்டான காளியும் அந்த ஊருக்கு செல்கிறார்கள்.

ஊர் பெரியவரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க கொஞ்சம் பொறுத்திருந்து  போட்டோ எடுக்க வேண்டிய சுழல் ஏற்படுகிறது. இதற்கிடையில், அங்கு நாயகி நந்திதாவைப் பார்க்கும் விஷ்ணு, அவர் மீது காதல் கொண்டு ஒரு நாள் என்ன, பெரியவர் உயிர் போகும் வரை இங்கேயே இருந்து புகைப்படம் எடுக்கிறேன் என்று அங்கேயே டேரா போட, அப்போதுதான் தெரிகிறது நந்திதாவுக்கு ஏற்கனவே திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட விஷயம்.

இதற்கிடையில் மரணமடைந்த ஊர் பெரியவரின் புகைப்படம் அவுட் ஆப் போகஸ் ஆகிவிட, அவரைப் போலவே இருக்கும் முனீஸ் காந்த், என்ற சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் ஒருவருக்கு தாத்தா வேஷம் போட்டு விஷ்ணு புகைப்படம் எடுத்து கிராமத்து மக்களிடம் கொடுக்கிறார். பிற்பாதியில், அந்த முனீஸ் இறந்தவரின் அண்ணன் மகனாக கிராமத்திற்குள் நுழை, விஷ்ணுவின் ஏமாற்றுவேலை அம்பலமாகிறது.

இதனால், கிராம மக்கள் அவரை கைது செய்து, அங்கேயே தங்கி கிணறு தோண்ட விடுகிறார்கள். காதல் போதையில், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்று நினைத்து, அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு அங்கே தங்கி, நந்திதாவை காதலிக்கும் விஷ்ணு, நந்திதாவை கரம் பிடித்தாரா இல்லையா, அந்த கிராமத்தில் இருந்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் க்ளைமாக்ஸ்.

பொதுவாக குறிப்பிட்ட சில நிமிடங்களில் மிகவும் சுவாரஸ்யமாக சொல்லப்படும் குறும்படங்கள், முழுநீளப் படமாக்கும் போது, சில தேவையில்லாத கூடுதலான போஷன்களை சேர்க்க வேண்டியது வரும், அப்படி சேர்க்கப்படுவது பொதுவாக காமெடி போஷனாகத்தான் இருக்கும், அந்த வரிசையில் இந்த படத்திலும், காமெடி போஷன்களை பெரிதாக இயக்குனர் ராம்குமார்  நம்பியிருப்பது முழுப்படத்திலும் பிரதிபலிக்கிறது.

குறிப்பிட்ட சில படங்களில் நடித்தாலும், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விஷ்ணு ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இந்த படமும் விஷ்ணுவுக்கு ஒரு முக்கியமான படமாகத்தான் இருக்கும். படம் முழுவதும் காமெடியாக சென்றாலும் விஷ்ணு மட்டும், எப்போதும் ஒரு வகையான சோகத்திலே இருக்கிறார் (முந்தையப் படங்களின் பாதிப்போ...) மொத்தத்தில் நடிப்பில் பாஸ் மார்க் தான்.

கிராமத்து பள்ளி மாணவி வேடத்திற்கு நந்திதா ரொம்பவே பொருந்திப் போகிறார். ஆள் பாதி ஆடை பாதி என்று இல்லாமல், எளிமையான அதே சமயம் முழுமையான பாவடை தாவணியில் ரொம்பவே அழகாக இருக்கிறார்.

வெறும் காமெடி நடிகராக மட்டும் இன்றி, கதாபாத்திர நடிகராக தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் காளி. முண்டாசுப்பட்டி என்ற குறும்படத்தில் ஹீரோவாக நடித்த காளி, இந்த படத்தில் நாயகனின் நண்பராக, காமெடியில் கலக்கியிருக்கிறார்.

படத்தில் ஹீரோ விஷ்ணுவுக்கு இணையாக ரசிகர்களை கவனிக்க வைக்கும் கதாபாத்திரம் முனீஸ் காந்த் தான். அந்த வேடத்தில் நடித்துள்ள ராமதாஸ், இதற்கு முன்பு பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவருடைய திறமையை நிரூபிக்க இயக்குனர் ராம்குமார் கொடுத்த வாய்ப்பை 200 சவீதம் பயன்படுத்தியுள்ள அவர், தான் அறிமுகமாகும் காட்சி முதல் படம் முடியும் வரை நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆனந்த ராஜை வில்லனாக பார்க்கவே ரொம்ப ஆனந்தமாக இருக்கிறது. ஒரு சில காட்சிகள் வந்தாலும், தமது கொடூர வில்லன் முகத்தை வைத்துக்கொண்டு அவரும் தனது பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்.

சீன் ரொலண்டின் இசையில் பாடல்கள் பிட்டு  பிட்டாக இருந்தாலும், நம்மை பீல் பண்ண வைக்கிறது. பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு 1982 காலகட்டத்தை அழகாக காட்டியிருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் சில கட்சிகள் போரடித்தாலும், விஷ்ணு முண்டாசுப்பட்டிக்குள்  நுழைவதும், அவரைத் தொடர்ந்து முனீஷ் காந்தின் வருகையும் படத்தை பரபர என்று நகைச்சுவையால் இழுத்துச் செல்கிறது.

விஷ்ணு, நந்திதாவின் காதல் படத்தின் முக்கியமானதாக இருந்தாலும், காமெடியின் சுனாமியில் அது காணாமல் போகிறது. பிறகு பாடல் காட்சிகளில் அவ்வபோது தெரிந்தாலும், படத்தில் காதல் பீலிங் ரொம்ப குறைவே.

படத்தை இரண்டு மணி நேரம் இழுப்பதற்காக, விண்கள், அதை கொள்ளையடிக்க வரும் வெளிநாட்டவர், அவருக்கு ஊதவி பிறயும் ஜமீந்தார் என்று கூடுதல் போஷன்களை சேர்த்தது சுவாரஸ்யமாக இருந்தாலும், அதுவே சில இடங்களில் போரடிக்கவும் செய்கிறது.

படத்திற்கு பலம் காமெடி என்றால், அந்த காமெடியை சரியாக கையாண்டுள்ள நடிகர்களும், அவர்களுடைய பாடி லேங்குவேஜ் மற்றும் வசன உச்சரிப்பும் தான்  முழுப்படத்திற்கும் பலமாக அமைந்துள்ளது. எனவே, படத்தையும் அவர்களுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...