Advertisement

Saturday, June 14, 2014

ரொம்ப பேசினாலே புஷ்ஷுனு ஆயிடுது! – ஜீவா பேட்டி

படங்களைப்பற்றி ரொம்ப பேசினாலே எதிர்பார்ப்பு அதிகமாயிடுது. ஆனால் எதிர்பார்ப்புக்கேற்றபடி படம் இல்லையெனில் தோற்று விடுகிறது. அதனால் இப்போதெல்லாம் படங்களைப்பற்றி ரொம்ப பேசவே பயமாக உள்ளது என்கிறார் ஜீவா. தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி இதோ…
* யான் படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள்?
ஜாலியாக எந்த கவலையும் இல்லாமல் சுற்றித்திரியும் ஒரு இளைஞனைப்பற்றிய கதை. ஆனால்,
அவர் எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்னையை சந்திக்கிறான். அதில் மாட்டிக்கொள்ளும் அவன் பின்னர் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இதுவரை நான் நடித்த படங்களில் ஜாலியாக மட்டுமே சுற்றித்திரிந்த நான், இந்த படத்தில் முதன்முதலாக ஒரு உலகளாவிய சமூக பிரச்னைக்காக போராடுகிறேன்.
இந்த மாதிரியான கதைகள் வந்திருந்தாலும், இந்த படம் அளவுக்கு அதை யாரும் வேர் அறுத்திருக்க மாட்டார்கள். குறிப்பாக, இந்த படத்தின் க்ளைமாக்ஸ் ரொம்ப புதுசாக இருக்கும். மனித உரிமை சார்ந்த ஒரு உலகப்பிரச்னையை இந்த படத்தில் தைரியமாக கையில் எடுத்திருக்கிறோம்.
* 6 மாதத்துக்கு முன்பே வெளியாக வேண்டிய படம் ஒரு வருடத்துக்கு இழுத்துக்கொண்டிருக்கிறதே?
அதற்கு காரணம், படம் பிரமாண்டமாக உருவாகிறது. படத்தின் பல முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை மொராக்கோவில் படமாக்கினோம். முதலில் நாங்கள் அங்கு செல்ல நினைத்தபோது அங்கு சீசன் சரியில்லை.
அதனால் அதற்காகவும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. அதையடுத்து அங்குள்ள பெரிய டீமுடன் இணைந்து வேலை செய்தோம். அதனால்கூட படப்பிடிப்பு முடிய காலதாமதமாகி விட்டது என்று சொல்லலாம்.
* இப்படத்தில் நீங்கள் வித்தியாசமான நடனத்திற்கு முயற்சி செய்திருப்பதாக கூறப்படுகிறதே?
கோ படம் தொடங்கி ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் நான் நடிக்கும் 4வது படம் இது. இந்த படத்திற்காக ரொம்பவே வித்தியாசமான பாடல்களை கொடுத்திருக்கிறார் அவர். வெஸ்டர்ன் பாடல்கள் தொடங்கி லோக்கல் கானா வரை வெரைட்டியாக கொடுத்திருக்கிறார். அதில் கானா பாலா பாடியுள்ள ஒரு பாடல் ஆறரை நிமிடம் வருகிறது.
ஒவ்வொரு பாடல்களுமே ஒவ்வொருவிதமாக இருந்ததால், அதிக ஈடுபாடு காட்டி நடனமாடியிருக்கிறேன். என்னைப்போலவே துளசியும் இந்த படத்தில் சிறப்பாக நடனமாடியிருக்கிறார்.
* அப்படின்னா இந்த படம் உங்களை பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் அப்படித்தானே?
கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். ஆனபோதும், இப்போது ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அதுபற்றி பெரிய அளவில் பேச பயமாக உள்ளது.
அப்படி சொன்ன பல படங்கள் புஷ்ஷாகி உள்ளன. அதேசமயம், இந்த யான் படம் என் கேரியரில் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். மேலும். இந்த படத்தில் முதலில் இந்தி நடிகர் அபிஷேக்பச்சனைத்தான் நடிக்க வைக்க இருந்தனர். பின்னர் வேறு படங்களில் அவர் பிசியாக இருந்தால் நடிக்கவில்லை. அதையடுத்துதான் என்னிடம் வந்தது.
* இந்த படத்தில் துளசிக்கும், உங்களுக்குமிடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி உள்ளதாமே?
துளசி சின்ன பெண்ணாக இருந்தாலும், நல்ல சீரியசாக நடிக்கக்கூடியவர். முதல்நாள் என்னை சந்தித்தபோது அங்கிள் என்றுதான் அழைத்தார். அவரிடம் பெயரைகூட சொல்லி கூப்பிடு. ஆனால் அங்கிள் என்று மட்டும் சொல்லாதே என்றேன். ஆனால் அவர் அதையடுத்து என்னை சார் என்றுதான் அழைக்கிறார்.
மேலும், அவரது அம்மா ராதா பெரிய நடிகை என்பதால், நடிப்புப் பற்றி நிறைய பயிற்சி கொடுத்துதான் துளசியை சினிமாவில் இறக்கியுள்ளார். அதனால் ரொமான்ஸ் காட்சிகள் மட்டுமின்றி மற்ற காட்சிகளிலும் அவரது நடிப்பில் நல்ல தேர்ச்சி தெரிகிறது.
அதோடு, நீங்கள் சொல்லும் அந்த கெமிஸ்ட்ரியும் இந்த படத்தில் எனக்கும், துளசிக்குமிடையே நன்றாகவே ஒர்க்அவுட்டாகியிருக்கிறது.
* ஜீவா என்றாலே டாஸ்மாக் நடிகர் என்றாகி விட்டதே. இந்த படத்தில் எப்படி?
இந்த படத்தில் அந்த மாதிரியான காட்சிகளுக்கு இடமே இல்லை. காரணம், இது ஒரு சமூக பிரச்னையை மையமாகக்கொண்ட கதை. அந்த வகையில் இந்த படத்தை இயக்கும் கேமராமேன் ரவி கே.சந்திரன் என்னை வேறு தளத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார்.
அதனால் டைரக்டர் ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி படத்திலிருந்து தொடர்ச்சியாக பல படங்களில் நண்பர்களுடன் டாஸ்மாக்கையே சுற்றி வந்ததால் என் மீது அப்படியொரு இமேஜ் படிந்து விட்டது.
ஆனால், இந்த படத்திலிருந்து அது மாறிவிடும். அதனால் இனி நானும் டீசன்டான நடிகராகி விடுவேன். இனிமேல் என் பெயரும் குட்புக்ஸ் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விடும்.
* இதுவரை நீங்கள் ஜோடி சேர்ந்த நடிகைகளில் உங்களை அதிகம் கவர்ந்த நடிகை யார்?
என்னுடன் ஜோடி சேர்ந்த எல்லா நடிகைளுமே நல்ல திறமையான நடிகைகள்தான். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அஞ்சலி, ரம்யா, கார்த்திகா, துளசி என எத்தனையோ நடிகைகளுடன் நடித்து விட்டேன். இவர்கள் எல்லோருமே ஒவ்வொரு வகையில் என்னை கவர்ந்தவர்கள்தான்.
ஆனால், யார் அதிகம் கவர்ந்தவர் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது அப்படி ஒருவரை சொல்லி மற்றவர்களை சொல்லாமல் விட்டால், அதன்பிறகு என்னுடன் நடிக்க கால்சீட் கேட்கும்போது தரமாட்டார்கள். அதனால் நடிகைகள் விசயத்தில் ரொம்ப உஷாராக இருப்பதே எனக்கு நல்லது.
* சில படங்களில் எதிர்பாராத தோல்வியை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?
சினிமாவில் வெற்றி தோல்வி சகஜமான விசயம் என்பதால் தோல்விகளை கண்டு துவண்டு போவதுமில்லை. வெற்றிகளைக்கண்டு தலைதெறிக்க ஆடுவதுமில்லை. ஆனபோதும் சினிமாவில் எதிர்பார்த்த சில படங்கள் பலத்த தோல்வியை கொடுத்தபோது, அடுத்து ஆர்யாவை ஹோட்டல் திறந்திருப்பது போன்ற நானும் ரெஸ்ட்டாரெண்டு திறக்க முடிவு செய்தேன்.
ஆனால் அதையடுத்து நடித்த என்றென்றும் புன்னகை ஓரளவு வெற்றி பெற்றதால், தொடர்ந்து நடிப்பில் மட்டுமே எனது கவனம் உள்ளது. மேலும், இப்போது நடித்துள்ள யான் படம் என்னை மாற்று தளத்துக்கு எடுத்துக்செல்லக்கூடிய படமாக அமைந்திருப்பதால், எதிர்காலத்தில் இன்னும் மாறுபட்ட கதைகளாக தேடிப்பிடித்து நடிப்பேன்.
* நண்பனுக்கு பிறகு மல்டி ஹீரோ கதைகளில் நடிக்கவில்லையே?
விஜய்யுடனும், ஷங்கர் சார் படத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக இருந்ததால் அந்த படத்தில் அதை நிறைவேற்றிக்கொண்டேன். அதோடு, விஜய்-ஸ்ரீகாந்த் என என்னை விட சீனியர் நடிகர்களுடன் அந்த படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.
அதன்பிறகு என்றென்றும் புன்னகையில்கூட இன்னொரு ஹீரோவாக வினய்யும் என்னுடன் நடித்தார். என்னைப்பொறுத்தவரை, நல்ல கதைகளாக, எனது கேரக்டரும் மற்ற ஹீரோக்களுக்கு இணையாக அமைகிறபோது கண்டிப்பாக மல்டி ஹீரோ கதைகளில் நடிப்பேன்.
அதோடு, கோ படத்தில்கூட வில்லனாக நடித்த அஜ்மலை சுறறித்தான் அந்த படத்தின் கதை பின்னப்பட்டிருக்கும். அவர் என்னைவிட பிரபலமில்லாத நடிகர்தான் என்றாலும, கேவி.ஆனந்த் சொன்ன கதை பிடித்ததால் நடித்தேன்.
அதேபோல், எனக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்று நினைக்காமல் மாறுபட்ட கேரக்டர்கள் கிடைத்தால் சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என்ற பாகுபாடு பார்க்காமல் எல்லா நடிகர்களுடனும் இணைந்து நடிப்பேன்.
* யான் படத்திற்கு பிறகு நீங்கள் முழுநேர ஆக்ஷன் ஹீரோவாக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறதே?
யான் படத்தைப்பொறுத்தவரை முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி ஆக்சனாகவும் இருக்கும். ஆனால், அதன்பிறகு தொடர்ந்து ஆக்ஷன் கதைகளாக மட்டுமே நடிக்க நான் விரும்பவில்லை. நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை அந்தந்த கதைகள்தான் தீர்மானிக்க வேண்டும்.
கதைகள் பிடிக்கிறபட்சத்தில் காதல், காமெடி, ஆக்சன், செண்டிமென்ட் என எல்லா அம்சங்களும் கலந்த கதைகளாகவே செலக்ட் பண்ணி நடிப்பேன் என்கிறார் ஜீவா.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...