Advertisement

Saturday, June 14, 2014

மந்தாகினி – திரை விமர்சனம்

நாயகி ஸ்ரீஐரா ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய பிறந்தநாளன்று வீட்டில் விழாவிற்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். ஸ்ரீஐரா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு மர்ம கும்பல் அவளை கடத்துகிறது.
பிறகு அந்த கும்பல் ஸ்ரீஐராவின் வீட்டிற்கு போன் செய்து தந்தையிடம் பணம் கேட்கிறார்கள். அப்பணத்தை தருவதற்கு தந்தையும் சம்மதிக்கிறார். அப்போது திடீர் என்று
ஒரு மர்ம சக்தி வந்து அந்த கும்பலை அழித்துவிட்டு ஸ்ரீஐராவை காப்பாற்றுகிறது.
பிறகு வீட்டிற்கு வரும் ஸ்ரீஐராவை கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அதன்பிறகு ஸ்ரீஐராவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது ஸ்ரீஐராவின் தந்தை, தன் மனைவியிடம் ஸ்ரீஐராவிற்கு என் நண்பனின் மகனை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளேன்.
இந்த செய்தியை அவளிடம் கூறப் போகிறேன் என்று சொல்கிறார். சொன்னபிறகு அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிடுகிறார். அவர் இறப்பதற்கு முன் ஸ்ரீஐராவிடம் என் நண்பனின் மகனை திருமணம் செய்து கொள் என்று கூறிவிட்டு இறக்கிறார்.
அதன்படி ஸ்ரீஐராவை பெண் பார்க்க நண்பனின் மகன் வருகிறார். அவர் வரும் வழியில் விபத்து ஏற்பட்டு இறந்து விடுகிறார். இதற்கிடையில் ஸ்ரீஐரா வேலை பார்க்கும் மருத்துவமனையில் சீனியர் டாக்டர் வலுக்கட்டாயமாக அவரை அடைய விரும்புகிறார். அதற்கு ஸ்ரீஐரா மறுக்கிறார். மறுநாள் அந்த சீனியர் டாக்டர் மர்மமான முறையில் இறக்கிறார்.
இப்படி அடுத்தடுத்து இறப்புகள் அதிகமாவதால் ஸ்ரீஜராவும் தாயும் சாமியாரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அதற்கு அவர் ஜாதகத்தில் கண்டம் இருப்பதாகவும் கோவிலில் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்றும் கூறுகிறார். அதன்படி பரிகாரம் செய்கிறார்கள். அதன்பிறகு போலீஸ் அதிகாரியான ரவிபிரகாஷ் வரன் கிடைக்கிறது.
இதற்கிடையில் ஸ்ரீஐராவின் முறைப்பையன் அவளை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ரவிபிரகாசும் ஸ்ரீஐராவும் பழகுவதை பொறுக்காமல் போதையில் ஸ்ரீஐராவின் வீட்டிற்கு வருகிறார். அங்கு ஸ்ரீஐராவின் கண்முன் மின்னல் போன்று அவர் உடம்பில் பட்டு இறக்கிறார்.
அவர் இறந்ததை விசாரிக்க ரவிபிரகாஷ், ஸ்ரீஐராவிடம் விசாரணை செய்கிறார். அதற்கு எனக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறார். உடனே ஸ்ரீஐராவை மனநிலை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் ரவிபிரகாஷ். அங்கு மருத்துவரிடம் செஞ்சிக் கோட்டை, மந்தாகினி என்று ஆக்ரோசமாக கூறிவிட்டு மயங்கி விழுகிறார்.
இறுதியில் மந்தாகினி யார்? எதற்காக நிறைய பேர் இறக்கிறார்கள்? செஞ்சிக் கோட்டையில் என்ன இருக்கிறது? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகி ஸ்ரீஐராவை சுற்றியே படம் நகர்கிறது. முழுப்பொறுப்பையும் ஏற்று கதையை தூக்கிச் செல்கிறார். நடனம், பதட்டம், அழுகை என நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்.
கிருஷ்னுடு, ரவிபிரகாஷ், ராஜீவ் ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். ஊமையாக வரும் சபியின் நடிப்பு அருமை. அவருடைய நடிப்பில் சில காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது.
படத்தில் பின்னணி இசை கூடுதல் பலம். பல காட்சிகளில் இசை ரசிக்கச் செய்கிறது. ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தின் முதல் பாதியில் தேவையற்ற காட்சிகள், தேவையற்ற பாடல்கள் வைத்து படத்தின் விறுவிறுப்பை குறைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீவிஷால். குறிப்பாக முதல் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சி திரைக்கதைக்காக திணித்ததுபோல் உள்ளது. இரண்டாம் பாதியில் திரைக்கதை அமைத்தவிதம் அருமை.
மொத்தத்தில் ‘மந்தாகினி’ மிரட்டல் குறைவு.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...